தமிழகத்தில் இலவச நீட் பயிற்சி வகுப்புகள் நிறுத்தம்!... காரணம் இதுதான்!
சென்னை : தமிழக அரசு சார்பில் பிளஸ் 2 மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி நிறுத்தப்பட்டுள்ளது. பொதுத்தேர்வுகள் நெருங்குவதையொட்டி நீட் இலவச பயிற்சி வகுப்புகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கடந்த ஆண்டு முதல் நீட் தேர்வு முறையில் நடைபெற்று வருகிறது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் நீட் தேர்வில் கேள்விகள் கேட்கப்படுவதால் அரசுப் பள்ளி மாணவர்கள் மிகவும் பாதிக்கப்படுவதாகவும், அவர்கள் மருத்துவ இடங்களை பெற முடியாத நிலை ஏற்படுவதாகவும் புகார்கள் எழுந்தன.
கடந்த ஆண்டு நீட் தேர்வு நடைபெறும் வரை அரசு நீதிமன்றம் மூலம் நீட் தேர்வுக்கு விலக்கு வாங்கிவிடும் என்று மாணவர்கள் காத்திருந்தனர். அதோடு நீட் தொடர்பான புரிதல் அதிக அளவில் மாணவர்களுக்கு இல்லாததால் நுழைவுத் தேர்வுக்குத் தயாராவதில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடர்பாடுகள் இருந்தன.
கட்டாயமான நீட் தேர்வு
தவித்த மாணவர்கள்
ஆனால் நீட் தேர்வுக்கு தமிழகத்திற்கு மட்டும் விலக்கு தர முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறிவிட்டதால் மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு கடந்த ஆண்டு முதல் கட்டாயமாகியுள்ளது. இந்நிலையில் அரசுப் பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்கள் சிரமங்களை சந்திப்பதால் நீட்இலவச பயிற்சி வகுப்புகளை அரசு அறிவித்தது.
அரசு இலவச பயிற்சி
அரசின் இலவச பயிற்சி
தமிழகம் முழுவதும் உள்ள 419 மையங்களில், 70 ஆயிரம் மாணவர்கள் நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி பெற்றனர். இந்நிலையில் நீட் இலவச பயிற்சிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன.
மார்ச் 1ல் பொதுத்தேர்வு
பொதுத்தேர்வு எதிரொலி
+2 பொதுத்தேர்வுகள் மார்ச் 1ம் தேதி முதல் தொடங்குவதால் நீட் தேர்வுக்கான பயிற்சி நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அரசு சார்பில் வழங்கப்பட்டு வந்த இலவச வினாவிடை புத்தக விநியோகமும் நிறுத்தப்பட்டுள்ளது.
கவலையில் மாணவர்கள்
கவலையில் மருத்துவ கனவு மாணவர்கள்
பொதுத்தேர்வுகள் காரணமாக நீட் இலவச பயிற்சி நிறுத்தப்பட்டிருப்பதாக காரணம் கூறப்பட்டாலும், மருத்துவ கனவுடன் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் மத்தியில் ஒரு வித குழப்பமே ஏற்பட்டுள்ளது. பொதுத்தேர்வுகள் மார்ச் தொடங்கி ஏப்ரல் வரை நடைபெறுகிறது, மார்ச் 9க்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும் மே மாதத்தில் நீட் தேர்வு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment